தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ்

நாஸ்ட்ரடாமஸ்  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.  இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது
நாஸ்ட்ரடமஸ்
நாளடைவில் ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். ஆனால் மதவாதிகள் எதிர்த்ததால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நாளடைவில் தனது ஆரூடங்களினால் அவருக்கு புகழும் ஆதரவும் பெருகியது. மக்களிடையே செல்வாக்கு வளர்ந்தது.
ஒருமுறை ஒரு செல்வந்தரின் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் நாஸ்ட்ரடாமஸ். அச்செல்வந்தரின் மாளிகையின் பின்புறம் இரண்டு பன்றிகள் கட்டப்பட்டு இருந்தன. ஒன்று கறுப்பு;  மற்றொன்று வெள்ளை.
அந்தச் செல்வந்தர் அவற்றைக் காட்டி, “இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம் என்று உங்களால் சரியாகக் கணித்துச் சொல்ல முடியுமா?”, என்று கேட்டார்.
“சந்தேகமென்ன? கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் உண்டு விடும்,” என்றார் நாஸ்ட்ரடாமஸ்.
”இந்த மாளிகைக்குள் ஓநாயா?” என்று கிண்டலாகச் சிரித்த பிரபு அங்கிருந்து அகன்றார். பின் நாஸ்ட்ரடாமஸுக்குத் தெரியாமல் ரகசியமாக சமையற்காரரை அழைத்தவர், அந்த வெள்ளைப் பன்றியைத்தான் கொன்று சமைக்க வேண்டும் என்று சொன்னார். உடனே சமையற்காரனும் அவர் கண் முன்னாலேயே அந்த வெண்ணிறப் பன்றியைக் கொன்று சமைக்க உள்ளே எடுத்துச் சென்றான்.
விருந்தும் முடிந்தது. அனைவரும் உண்டு முடித்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸிடம், “நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?”  என்று கேட்டார். உடனே நாஸ்ட்ரடாமஸ், ”அதுதான் முன்பே சொன்னேனே, கறுப்புப் பன்றியைத்தான் சாப்பிட்டோம்” என்றார்.
 கிண்டலாகச் சிரித்த அப்பிரபு, உடனே சமையற்காரரை அழைத்தார். “எந்தப் பன்றியைச் சமைத்தாய்  என்பதை இங்கு எல்லாரிடமும் சொல்” என்றார்.
சமையற்காரர், “கறுப்புப்பன்றி” என்றார்.
பிரபுவுக்கு ஒரே அதிர்ச்சி.
” நான் உன்னை வெள்ளைப் பன்றியைத்தானே சமைக்கச் சொன்னேன்? என் கண் முன்னால்தானே அதனை நீ கொன்றாய்?”  என்றார் பிரபு கோபத்துடன்.
“ஆம்! பிரபுவே! ஆனால் அடுப்பில் வேக வைக்க வைத்திருந்த பன்றி இறைச்சியை உங்கள்  வேட்டை நாய் கவ்வி இழுத்துச்சென்று விட்டது. அதனால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்” என்றார்.
அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு ஓநாய்க்குப் பிறந்தது.
நாஸ்ட்ரடமஸின் ஆரூடப் புத்தகம்
நாஸ்ட்ரடமஸின் பல ஆருடங்கள் புத்தகமாக வெளிவந்தும் புகழ் பெற்றன. 
இவ்வாறு தன் வாழ்வில் பல்வேறு அதிசய ஆருடங்களைச் சொன்ன, பல மன்னர்களை, பிரபுக்களை, செல்வச் சீமான்களை நடுங்க வைத்த நாஸ்ட்ரடாமஸின் ஆருடங்கள், அவர் இறந்த பின்னும் பலித்தது. இன்றும் பலித்து வருகிறது என்பது அதிசயத்திலும் அதிசயம் அல்லவா?
இது ஒரு மீள் பதிவு

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

கவிதை மற்றும் கட்டுரைகள்