சென்ரியு கவிதைகளில் சமுதாயச் சிந்தனை

தமிழ் இலக்கிய உலகில் கவிதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புது மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. சமூகப் பொருளாதார அரசியல் சூழல்களே இம்மாற்றங்களுக்குப் பெரிதும் காரணம் எனலாம். அறிவியலின் நவீன வளர்ச்சி உலகின் பரப்பை சுருக்கிவிட்டது. இந்த நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மொழிபெயர்புக் கலையின் வளர்ச்சியினாலும் பிற நாட்டு இலக்கியக் கொள்கைகள், திறனாய்வுகள், வடிவங்கள் போல் வன தமிழில் தலை எடுக்கத் தொடங்கின. இவ்வகையில் தமிழுக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவம் தான் "சென்ரியூ" கவிதை வடிவம்.
"சென்ரியூ" - தோற்றம்
சென்ரியூ கவிதைகளின் தோற்றம் குறித்துப் பொதுவாகச் சொல்வதெனில் இஃது ஹைகூ கவிதையிலிருந்து தோன்றியது என்று கூறிவிடலாம் என்றாலும் ஹைகூவிலிருந்து சென்ரியு தன்னைத் தனித்துவப்படுத்திக் கொண்டதற்கு ஒரு நீண்ட கால வரலாறு உண்டு. 1980 ஆம் ஆண்டு "அன்றாடமை" என்னும் தலைப்பில் சென்ரியூ அங்கதக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது. இதன் தொகுப்பாசிரியர் மேரி கேசல் என்பவர் இந்நூலின் முன்னுரையில் "ஹைகூவின் அங்கத வடிவம் சென்ரியூ. ஹைகூ இயற்கை உலகில் பார்வை செலுத்துகிறது எனில், மக்கள், பொருள்கள், சம்பவங்கள் ஆகியவற்றின் மீது பார்வையைக் குவிப்பது சென்ரியூ. 5+7+5=17 என்னும் அசைகள் அமைப்போடு ஒழுங்கு வகைப்பட்டு ஒவ்வொரு கவிதையும் இருக்கும்" என்று பொதுவான கருத்தை மட்டும் வெளியிட்டிருக்கிறார். இதில் சென்ரியூவின் தோற்ற வரலாறு தெளிவாகப் புலப்படவில்லை. எனினும் ஹைகூ கவிதையிலிருந்து தோன்றியதே சென்ரியூ என்பது மட்டும் புலப்படுகிறது.
ஹைகாய் - நொ - ரெங்கா என்னும் இணைப்புக் கவிதை அல்லது தொடர் கவிதையிலிருந்து தான் ஹைகூ தோன்றியது. இதேவிதக் கவிதையிலிருந்து தோன்றியதே சென்ரியூ வகைக் கவிதையும். இதன் வரலாற்றை நோக்கும் போது இதனை ஒரு கவிதை விளையாட்டு என்றே கூறலாம். இக்கவிதைகள் பெரும்பான்மையும் நகைச்சுவை உயர்வுமிக்கதாகவே இருக்கும். ஹைகாய் - நொ - ரெங்கா எனப்படும் நகைச்சுவை இணைப்புக் கவிதைகளில் "பாஷோ" என்பவர் முதன்மைப்பெற்று விளங்கினார்.
தேநீர் கடைகளிலும் மதுக்கடைகளிலும் இக்கவிதைகள் எழுதப்பட்டன. "கவிதையின் இவ்வகைமையில் வள்ளலார் என்று முத்திரை பதித்த ஒருவர் - இத்தகைய கவிதைகளை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் திறமை பெற்றவர் என்று புகழ் பெற்ற ஒருவர் - இதற்கெனப் பணியில் அமர்த்தப்படுவர் அவருக்கு ஜப்பானிய மொழியில் "டென்யா" என்று பெயர். அவர் தான் - தேநீர், மதுக்கடைகள் பக்கம் "மாக்கூ" என்னும் முன் கவிதைகளை (போட்டிக்கு அழைக்கும் அறைகூவல் வரிகளை) ஒரு திங்களின் சில வாரங்களில் எடுத்துக் கொண்டு போய்க் கொடுப்பார். அடுத்த சுற்று - அக்கடைகளுக்குச் சென்று அவரோ அவருடைய முகவரோ - மாக்கூ கவிதைகளுக்குப் பதிலாக வந்த கவிதைகளைத் திரட்டி வருவார். இவ்வாறு கொடுக்கப்படும் பதில் கவிதைகளுக்கு "இட்சுகேகூ" என்று பெயர். அப்போதே அடுத்த சுற்றுக்கான முன் கவிதைகளை அக்கடைகளில் ஒப்படைப்பார். பதில் வரிகளைத் தருபவர்கள் கூடவே சிறிதளவு கட்டணம் செலுத்துவர். "இட்சுகேகூ" கவிதைகளில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்குப் பரிசு தர அந்தத் தொகையைப் பயன்படுத்திக் கொள்கிற பழக்கம் கவிதைக் கலைக்குச் சாமரம் வீசுவது போல் அமைந்திருக்கிறது.
வெற்றி பெற்ற கவிதைகளை அச்சிட்டு - அப்போதே அக்கடைகளில் விற்பனைக்கு எனக் கொடுத்து விடுவார்கள் 2. இப்படிப்பட்டத் தொடர் கவிதைகளில் பதிலாக வந்த கவிதைகளில் சிறந்ததை எடுத்துத் தொகுத்து வெளியிட்டனர். அவ்வாறு வடிவத்திலேயே சென்ரியு தொகுப்பட்ட கவிதைகளே ஹைகூ கவிதைகளும், சென்ரியு கவிதைகளும் ஆகும். ஹைகூ கவிதை வடிவத்திலேயே சென்ரியு கவிதைகளும் எழுதப் பெற்றன என்றாலும், இரண்டின் உள்ளடக்கங்களும் எதிர் எதிரானவையாகும். எனவே ஹைகூ வேறு சென்ரியு வேறு.
ஹைகூ - சென்றியு
ஹைகூ வடிவத்தில் சென்ரியு அமைந்திருந்தாலும் இரண்டும் வெவ்வேறானவை. ஹைகூ - சென்றியு இவற்றிற்கு இடையேயுள்ள வேற்றுமைகளாக முப்பத்து மூன்று வேற்றுமைகளைச் சுட்டுகின்றார். நிர்மலா சுரேஷ் "ஒரு வண்டி சென்ரியு" என்னும் நூலின் முன்னுரையில் தானும் தமிழன்பனும் வேறுபடுவதைக் குறிப்பிடுகின்றார். இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஹைகூ - சென்ரியு இரண்டும் ஒன்றல்ல என்று உணரலாம்.
ஹைகூவைப் போன்றே சென்ரியுவும் ஜப்பானில் முகிழ்த்ததுதான். ஹைகூ அழமானது. சென்ரியு மேலோட்டமானது. ஹைகூ இயற்கையைப் பற்றியும் ஆழ்நிலைத் தத்துவங்களைப் பற்றியும் பேசும். சென்ரியு மனிதனைப் பற்றியும் மனித உணர்வுகளைப் பற்றியும் பேசும். ஹைகூ கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. சென்ரியு கட்டுப்பாடற்றது. ஹைகூ முழுக்க முழுக்கக் கவிதை. சென்ரியு கவிதையாக இல்லாமலும் இருக்கும். இது போன்றே வடிவத்தைத் தவிர்த்து எல்லா வகையிலும் ஹைகூவும் சென்ரியுவும் வெவ்வேறானவை என்பது உணரத்தக்கது.
"சென்ரியு" என்னும் உச்சரிப்பு:
"சென்ரியு" கவிதைகளின் தாயகம் ஜப்பான். "சென்டியு" என்பதுதான் ஜப்பானி ஒலி உச்சரிப்பு. ஆங்கிலத்தில் ந்ங்ய்ழ்ஹ்ன் "த" சேர்வதைப் பார்த்து அதனைத் தமிழில் சென்ரியு என்று "ரி" ஒலியோடு உச்சரிக்கத் தொடங்கினோம். உண்மையில் "த" என்பது ஜப்பானிய மொழியில் மௌனம் கொண்டது. அது தமிழின் "க" என்பது போலவே அங்கு ஒலிக்கப்படுகிறது. மற்றொன்று இறுதி எழுத்தாகிய "ம" வின் ஒலி நீட்டம். ஆங்கிலத்தில் ம விற்கு மேல் ஒரு சிறிய கோடிட்டு, ம என அதனைப் புலப்படுத்துகிறார். ஜப்பானிய மொழியில் "சென்டியு" என்பதே சரியான உச்சரிப்பு நிலை ஆங்கில மொழியாக்கம் பெற்று மீண்டும் தமிழுக்கு வரும்போது "சென்ரியு" என்ற உச்சரிப்பைப் பெற்றது.
சென்ரியு - பெயர்க்காரணம்:-
சென்ரியக் கவிதைகள் ஜப்பானில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களால் எழுதப்பட்டு வருகிறது. சென்ரியூ என்றால் "ஆற்றோரத்து வில்லோ மரம்" என்று பொருள். சென்ரியு "காரைஹாச்சிமோன் என்னும் கவிஞரின் புனைப் பெயராகும். 1718 - 1790 வரை வாழ்ந்த அவர் காரைசென்ரியு என்று புனைப் பெயர் சூட்டிக்கொண்டார். காரையின் தந்தையார் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அவருக்குப் பின் காரை அப்பணியில் அமர்ந்தார். கவிதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்ற இவர் 1757 - இல் "மேகுசுகு" என்னும் கவிதையின் தேர்வாளர் ஆனார். இப்பணி செய்கின்றவர்களை "ஆசான்" என்றும் "டென்யா" என்றும் அழைத்தனர். இவர் ஆயிரக்கணக்கான கவிதைகளைப் பதிப்பித்து வெளியிட்டார். இவர் பதிப்பித்து வெளியிட்ட கவிதைகள் இவர் பெயரிலேயே சென்ரியு கவிதைகள் என வழங்கலாயின.
தமிழில் சென்ரியு:-
ஜப்பானில் சென்ரியு கவிதைகள் அடங்கிய முதல் தொகுப்பு 1765 ஆம் ஆண்டு வெளியானது. இதன் பெயர் யானாகிதாறு என்பதாகும். அதன்பின்பு ஏராளமான கவிதைத் தொகுப்புகள் ஜப்பானில் வெளிவந்து விட்டன. இன்று ஜப்பானில் சென்ரியு கவிதைகளுக்கென்றே இதழ்கள் நடத்தப்படுகின்றன. மனநலத்திற்கு உரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக, கணினி இணையம் சென்ரியுவைச் சேர்த்திருக்கிறது. தமிழில் ஹைகூ பரவிய அளவுக்கு சென்ரியு பரவவில்லை என்ற உண்மை ஒத்துக்கொள்ளப்பட வேண்டியதே. தனித்தனிக் கவிதைகளாகப் பலர் எழுதி வருகின்றனர். நூல் தொகுப்பாக வெளிவந்திருப்பது மிகச் சிலவே. 2001 ஆம் அண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பன் முழுக்க முழுக்க சென்ரியூ கவிதைகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டார். "ஒரு வண்டி சென்ரியு என்னும் இந்நூலே தமிழில் முதல் சென்ரியு கவிதை நூலாகும். இந்நூலின் கவிதைகளே இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
சென்ரியு கவிதைகளில் சமுதாயச் சிந்தனை:-
ஹைகூ கவிதையின் அங்கத வடிவம் தான் சென்ரியு என்னும் மேலோட்டமான கருத்து ஏற்புக்குரியதன்று. தொடக்க காலத்தில் அங்கதச் சுவை கொண்ட கவிதைகளே எழுதப்பட்டதனால் இக்கருத்து உருவானது. இன்றைய நிலையில் சென்ரியுவில் சமுதாயச் சிந்தனைகள் பெருமளவில் காணப்படுகின்றன. என்றாலும் இதற்கே உரிய பண்பான நகைச்சுவையை இக்கவிதை வடிவம் விட்டுக்கொடுக்கவில்லை. எதைச் சொன்னாலும் அதில் கொஞ்சம் நகைக்சுவை கலந்து சொல்லும் நிலை நிலைத்துவிட்டது. போலி மருத்துவம், போலி பாசம், கல்வி நிலை போன்ற சமுதாயம் சார்ந்த கருத்துக்கள் சென்ரியு கவிதைகளில் இடம் பெற்றுள்ளன.
வறுமை:-
வறுமை என்பது ஒரு காலத்தில் இந்தியாவின் தேசிய அடையாளமாகவே இருந்தது. வறுமை இல்லாத நாடே உலகில் இல்லை எனலாம். தனது தேசத்து வறுமையைப் பற்றி கவலைப்படாதவன் கவிஞனே இல்லை. சென்ரியு கவிதைகளில் வறுமை நயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகனைக் கல்லூரிக்கு அனுப்பிப் படிக்க வைக்கும் அப்பாவிற்கு விடுதியிலிருக்கும் மகன் எழுதும் கடிதம் வருகிறது. தந்தை படிக்கிறார். இந்த ஒரு நிகழ்ச்சியிலேயே வறுமை மிகவும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியிலிருந்து / மகன் கடிதம்
கடன்களால் படிக்கும் அப்பா (ப.15) யு/ஏராளமாகக் கடன் வாங்கி மகனைப் படிக்க வைக்கிறார் தந்தை. மகனிடமிருந்து கடிதம் வந்தால் படிக்கும் போது கடன் தான் முன்வந்து நிற்கிறது.
சமூக அவலம்:-
நாம் வாழும் சமுதாயம் பல துறைகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு இயங்கும் எல்லாத் துறைகளிலும் சிர்கேடுகள் உள்ளன என்பதை சென்ரியு குறிப்பிடுகிறது. ஆயிரமாயிரம் நீதி நூல்களைப் பாடி வைத்திருக்கும் நம் இந்திய மண்ணில் குறிப்பாகத் தமிழ் மண்ணில் சாராய வியாபரம் கொழுத்திருக்கிறது என்பதை தகுந்த குறியீடுகள் விளக்குகின்றன.
பசுவின் மடியில்:-
சாராயம்/நீதி நூலுக்கும் ஓர் ஆழாக்கு (ப.18)
அரசு அலுவலகங்கள் சோம்பிக் கிடப்பதைப் பின்வரும் கவிதை சித்தரிக்கிறது.
மூன்று வருடங்களுக்குப் பின் / யுமுதல் ஓய்வு ஊதியம்/ ஈமக் கடனுக்கு (ப.19)
ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அவர்கள் வாழும் போது அவர்களுக்குப் பயன்படாமல், அவர்களது ஈமச் கடனுக்குப் பயன்படுமளவிற்குக் காலதாமதமாய்க் கிடைக்கிறது. இது அரசு அலுவலகங்களின் காணும் அவலம். நமது கிரிக்கெட் தேர்வுக் குழுவிலும், பயிற்சிக் குழுவிலும் தகுதியற்றவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது இங்கு நகைச்சுவையோடு சுட்டப்படுகிறது.
எட்டுப் பந்தயங்களில் /பூச்சியம் போட்டவன்/ கிரிக்கெட் பயிற்சியாளன் (ப.23) எந்தத் துறை எப்படி இருந்தாலும் நீதித் துறை பழுதில்லாமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்டத் துறையே இன்று அவலநிலை அடைந்திருக்கிறது.
நீதிபதி சொன்னபடி நின்றது / நீதி சொன்னபடி நிற்காத / தராசு முள்(ப.26)
நமது ஊர்களில் நூலகங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவோர் வெகு சிலரே. பெரும்பாலோருக்கு நூலகம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது. நூலகத்திலும் படிப்பவர்களைவிட தூங்குபவர்களே அதிகம். நூல்வாசிக்கும் வழக்கம் இல்லாதது ஒரு சமுதாயத்தின் மிகப் பெரிய அவலம் இது.
வாசகர் நூலகம் / தூக்கம் / விழித்திருக்கும் நூல்கள் (ப.43)
அரசியல்:-
அரசியலைச் சாக்கடை என்று சொல்லுவாரும் உண்டு, புனிதமானது என்று சொல்லுவாரும் உண்டு. எப்படியிருந்தாலும் அரசியல் விமர்சனத்திற்கு உரியதாகவே இருந்து வருகிறது. சென்ரியுவின் விமர்சனம் நகைச்சுவையானது.
பக்தர்களிடம் / கடவுள் கேட்ட வரம் / அரசியலுக்கு இழுக்காதீர்கள் (ப.21)
கடவுளே கண்டு அஞ்சும் நிலையில் அரசியல் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பதவி இழந்த அமைச்சர் / அறிக்கை / இனிநாட்டுக்கு உழைப்பேன்(ப.63)
அமைச்சர் பதவியிலிருந்த வரை நாட்டுக்கு உழைக்கவில்லை. இனி நாட்டுக்கு உழைப்பேன் என்கிறார். அது வராவிட்டால் இது / இது வராவிட்டால் அது / எதுவும் வராவிட்டால் அரசியல் (ப.66)
மக்கள் நிலை:-
வாழ்கின்ற காலத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் இருக்கின்றனர். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எண்ணமுடையவர்களும் இருக்கின்றனர். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையோடு வாழும் மனிதனை உலகம் போற்றுகிறது. மற்றவர்களைத் தூற்றுகிறது. எப்படியும் வாழலாம் என்கிற மனிதரை கேலியோடு பார்க்கிறது சென்ரியு.
பணம் / எதையும் செய்யும் தெரிந்தவர்கள் / பணம் செய்தார்கள் (ப.26)
அதிகாரி பிறந்த நாள் / வீடு முழுக்க / இலவச அலங்காரம் (ப.60)
கை நீட்டி வாங்காத / அதிகாரி மனைவி / கை நிறைய வளையல்கள் (ப.46)
இக்கவிதைகள் மனிதனின் தவறான வாழ்க்கை முறையினைக் காட்டுகின்றன.
பக்தி:-
கடவுள், கோயில் இவற்றைப் பற்றிய உயர்வான எண்ணம் சமூகத்தில் நிலவுகின்றது. அவ்வாறு இருப்பினும் சில விரும்பத்தகாத செயல்களும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கின்றன. ஆதலால் கடவுள், பக்தி கடவுள் பக்தி இவற்றைக் குறித்த ஒரு எதிர் விமர்சனம் கவிதைகளில் இடம் பெறுகின்றது.
அதர்மங்கள் / அஞ்சிய கடவுள் / அவதார நிறுத்தம் (ப.32)
இப்போதெல்லாம் இறைவனின் அவதாரம் நிகழ்வதில்லை. காரணம் அதர்மங்கள் அதிகமாகிவிட்டன என்கிறது இக்கவிதை. கடவுள் சிலைகளைத் திருடுகிற இந்த நாட்டில், கடவுள், பக்தி இவைகளைப் பற்றிய கேலியும், நகைச்சுவையும் கவிதைகளில் இடம் பெறுகின்றது.
சிலைக்கு வெளியே போய் வந்த / கடவுள் சிலையாய் நின்றார் / சிலையைக் காணோம் (ப.40)
பூசாரி கையில் கட்சி / வெளியேற்றப்பட்டார் / கடவுள் (ப.48)
கோயில் கூட அரசியல் கலந்துவிட்ட பரிதாபநிலையைக் காட்டுகிறது. இது இன்றைய பூசாரிகளிடம் இருந்து பக்தியும் போய் நலமும் போய் சுயநலம் வந்துவிட்டது இக்கவிதை எடுத்துக்காட்டு.
குழந்தை வளர்ப்பு:
தாய், தந்தை இருவரும் பணியில் இருக்கும் குடும்பங்களில் குழந்தைகள் கவனிப்பாரற்றுத் தவிக்கின்றனர். அதோடு கருவிகளின் தொழில் நுட்பம் பெருமளவில் வளர்ந்துவிட்டதால் குழந்தைகளிடம் பொம்மைகள் பேசிக் கொண்டிருக்கின்றன.
குழந்தையோடு:-
யாரும் பேசவில்லை / பேசும் பொம்மை (ப.38)
உண்மைக் குழந்தைகளை விட பொம்மைகள் கவனத்தைக் கவரும் வகையில் இருப்பதால் ஒரு குழந்தை
அம்மா! / இந்தப் பாப்பாவை விற்றுவிட்டு / வேறு பொம்மை வாங்கலாம் (ப.40)
என்று சொல்கிறது. அந்த அளவிற்கு உண்மையை நிழல் விழுங்கிக் கொண்டிருக்கிறது.
மீட்டுருவாக்கம்:-
அகலிகை, சிதை போன்ற தொன்மங்கள் சிறு கதைகளிலும் புதுக்கவிதைகளிலும் மீட்டுருவாக்கம் செய்யப்படுவது போல் சென்ரியூவிலும் செய்யப்பட்டுள்ளது.
அடடே! / இந்த பழம் இனிக்கும் / ஏணியுடன் அதே நரி (ப.45)
சிச்சி இந்தப் பழம் புளிக்கும் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த நரிக்கதை இங்கே மறுவாசிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சென்ரியு கவிதை அங்கதங்களை மட்டும் சொல்வதாக இல்லாமல் சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் புரையோடிப் போயிருக்கும் அவலங்களை சுட்டிகாட்டுகிறது. மென்மையான நகைச்சுவையோடு சமூகத்தின் ஆழ்ந்த அவலங்களை எடுத்துக் காட்டும் சென்ரியு கவிதை வடிவம் இச்சமுதாயத்தைப் புணரமைப்புச் செய்யத் தமிழன்னையின் கையில் கிடைத்திருக்கும் ஒரு புதிய ஆயுதம் என்றே சொல்லலாம்.
நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்.

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி